வருகைக்கு நன்றி!
அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்...
இந்த இணையத்தளம் மூலமாக தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
"ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி
காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய்
ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி
நாராயணர்பாதம்நாவினில்"
என்னும் அகிலத்தின் வரிகளை மனதில் கொண்டு இப்பகுதியை வைகுண்டர் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அன்பர்களே இப்பகுதியில் உங்கள் பங்கும் முக்கியமானதாகும், எனவே உங்கள் கருத்துக்கள்,அய்யாவை பற்றிய செய்திகள் ,உங்கள் ஊரில் உள்ள தாங்கல்கள் பற்றிய தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.
அயோத்தியா பட்டினம் தான் அழியுதப்பா என்மகனே!
அய்யா வழி அன்பர்கள் இந்த தலைப்பை பார்த்த உடனேயே புரிந்து கொண்டிருப்பார்கள் ,பிறரும் இதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா.ஆம் அன்பர்களே இந்த வசனம் இன்று தற்போதைய அயோத்தியின் நிலைமையை பார்த்து விட்டு யாரோ ஒருவர் சொன்ன வசனம் அல்ல. அப்படி சொல்வது ஒன்றும் பெரிய விசயமும் அல்ல.ஆனால் இன்றைய இந்த அயோத்தியின் நிலைமையை கிட்டத்தட்ட 190 ஆண்டுகளுக்கு முன்னரே அய்யா வைகுண்டர் தன் அருள் நூலில் கூறியிருக்கிறார் என்பது மிக பெரிய விசயமாகும் .
"இன்னும் ஒருகாண்டம் எடுத்தெழுதி பாடுகின்றேன்
அயோத்தியா பட்டணந்தான் அழியுதப்பா என்மகனே"
என்ற இந்த வரிகள் வைகுண்டர் தந்தவைகளாகும்.
இந்த அயோத்தியில் என்ன பிரச்சினை நடக்கிறது,எங்கிருந்து வந்தது இந்த அயோத்தி என்று பார்ப்போம்.அயோத்தி என்பது ராமன் பிறந்த இடம் என்பது இந்து மக்களின் நம்பிக்கையாகும்.
பிரம்மா தனது புத்திரனை (ஸ்வாயம்புவமனு) அழைத்துக் கொண்டு, இருவரும் வைகுண்டம் சென்றடைந்தார்கள். அங்கு ஸ்ரீமந் நாராயணனை தரிசித்து வணங்கினார்கள். அவரிடம் விஷயம் சம்பந்தமாக அவசியமான அறிவுரைகள் கூறி, வழிகாட்ட வேண்டினர். ஸ்ரீமந் நாராயணன் அவர்களின் பிரார்த்தனையைக் கேட்டு அதற்காக வைகுண்டத்தின் மத்தியிலிருந்து (அயோத்தி) என்னும் ஒரு சிறு பாகத்தை எடுத்து, பிரம்மா மூலமாக பிரும்மாவின் முதல் குமாரன் மனுச் சக்கரவர்த்திக்குப் பரிசாக அளித்தார். ஸ்ரீமந் நாராயணனின் அறிவுரைப்படி, ஸ்வாயம்புவமனு அதை எடுத்துக் கொண்டு வந்து, பூலோகத்தில் புனிதமான ஸரயூ நதியின் தென்கரையில் ஸ்தாபிதம் செய்தார். தோற்றுவாய் அயோத்யா (கோசல தேசம்) மனித குல நாகரீகத்தின் (ஆதி ஸ்ரோத்) ஆதிமூலமாக விளங்கியது. என்பது இந்துகளின் பார்வையில் அயோத்தின் வரலாறு ஆகும்.
இந்த அயோத்தியில் சூரிய குலம் தோன்றி அக்குலத்தில் நாராயணர் ஸ்ரீ ராமனாக பிறந்து உத்தமனாக வாழ்ந்து ராவண வதம் செய்தார் என்பது வரலாறு. மேலும் 1528ஆம் ஆண்டு மிர் பக்கி என்னும் முகலாய படைத்தலைவனால் கட்டப்பட்ட பாபர் மசூதி இருந்த பகுதி இந்த அயோத்தி என்பது முஸ்லிம் மக்களின் நம்பிக்கையாகும்.
இந்த இருவரின் நம்பிக்கை மற்றும் மத வெறியே இன்றைய அயோத்தியின் பிரச்சினை. இந்த பிரச்சினையில் பல்லாயிர கணக்கில் உயிர்கள் பறிபோனது தான் பரிதாப விஷயம்.
இதையே வைகுண்டர் ,
"நான்பெரிது நீ பெரிது நிச்சயங்கள் பார்ப்போமென்று
வான்பெரிது என்று அறியாமல் மாழ்வார் வீன்வேதமுல்லோர்"
இந்த சொத்து சண்டை இன்று நேற்றல்ல 1855ஆம் ஆண்டு துவங்கி இன்றுவரை அங்கு பல மதக்கலவரங்களாக வெடித்த வண்ணம் உள்ளது. சரி! நீதிமன்றத்தின் மூலமாவது இதற்கு ஒரு தீர்வு பிறக்கும் என காத்திருந்தால்...’புதிய’நீதியால் மறுபடியும் கலவரங்கள் உண்டாக வாய்ப்பிருப்பதாக நீதிபதிகளும் பீதி கொள்வதால் நீதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இப்படி நீதிமன்றங்களே வாய்தா வாங்கும் இந்த வழக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை விட பழமையானது. ஆம்! இதன் முதல் வழக்கு 1885 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பைஸாபாத் கீழ் நீதிமன்றத்தில் மகந்த் ரகுபீர் தாஸ் என்பவரால் அப்பகுதியில் கோயில் கட்ட அனுமதி கேட்டு தொடரப்பட்டது.மாவட்ட நீதிபதி முன்பு தொடரப்பட்ட அந்த வழக்கு அப்போது தள்ளுபடி செய்யப்பட்டது.
1949ஆம் ஆண்டு உள்ளூர் சாது ஒருவனின் கைங்கர்யத்தால் அங்கு ராமர் சிலை வைக்கப்பட்டு ஒரு பெரும்கலவரம் நடந்தேறி அதற்கு நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகி உள்ளது. அதை தொடர்ந்து அப்பகுதியின் நுழைவாயிலை அடைத்து வழிபாட்டு அனுமதியை மறுத்துள்ளது மாவட்ட நீதிமன்றம்.
12ஆண்டுகள் கழித்து 1961ஆம் ஆண்டு உத்திரபிரதேச மத்திய சன்னி வக்பு வாரியத்தின் சார்பாக முகமது அன்சாரி என்பவரால் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதனால் 1996ஆம் இந்த நான்கு வழக்குகளும் ஒன்றிணைக்கப்பட்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அயோத்யா நிலம் தொடர்பான வழக்கில் தற்போது நீதிபதிகள் தீர்ப்பை வாசித்து விட்டனர் . சர்ச்சைக்குள்ளான நிலத்தை 3 பாகங்களாக பிரித்து வக்ப் போர்ட், நிர்மோஹி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகியோருக்கு பிரித்து வழங்கப்பட வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. தற்போதுள்ள நிலைமை 3 மாதங்களுக்கு தொடர வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பல்வேறு பலிகளை கண்ட இப்பிரச்சினை இத்தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வருமா அல்லது இன்னும் பிரச்சினை கிழம்புமா என்பது கேள்விக்குறி தான்.இதைத்தானே வைகுண்டர் அன்றே "அயோத்தியா பட்டினந்தான் அழியுதப்பா என்மகனே!" என்கிறார்.
அய்யா உண்டு
சுவாமி தோப்பு பதி
சுவாமி தோப்பு பதி
(மணவை பதி)
பாரத திருநாட்டின் தென்முனையில் அமைந்துள்ள மூன்று கடல் சூழ்ந்த நகரமே கன்னியாகுமரி ஆகும்.இதன் அருகில் உள்ள ஒரு இடமே சாமிதோப்பு ஆகும்.இது தெச்சணம் என்றும் அழைக்கபடுகிறது.தெச்சணம் என்றால் சிவ பூமி என்று பொருள்.
கலி என்ற மாயையில் சிக்கி தவிக்கும் மனிதர்களை கரை ஏற்ற பரம்பொருள் விஷ்ணு அய்யா வைகுண்டமாய் 1008 இல் மாசி மாதம் 20 இல் அவதரித்து தேவர்கள் சூழ திருச்செந்தூர் விட்டு தெச்சணம் வந்தார்.அங்கு அவர் ஆறு ஆண்டுகள் தவம் செய்து சாதியால் தாழ்த்தப்பட்ட மக்களை உயர செய்தார்.மேலும் தண்ணீர், மண்ணால் பல நோய்களை தீர்த்தார்.சப்த மாதர்களையும் ,தெய்வ மாதர்களான மகாலெட்சுமி,பகவதி,பார்வதி,மண்டைகாட்டால் ,வள்ளி,தெய்வானை,பூமடந்தை ஆகியோரின் சக்திகளை இகனை மனம் புரிந்தார். இத்தனை சிறப்புகளை கொண்ட பதி சாமிதோப்பு பதி ஆகும்.
முத்திரி கிணறு:
முத்திரி கிணறு அய்யா வைகுண்டரால் அனைத்து சாதி மக்களுக்காக அமைக்கப்பட்டது ஆகும்.முன்வினைகளை மாற்றும் கிணறு முத்திரி கிணறு ஆகும்.பதிக்கு செல்லும் பக்தர்கள் இங்கு பதமிட்டு அரகர சிவசிவ நாமம் சொல்லி பதிக்கு செல்வார்கள்.
அகிலம் இக்கிணற்றின் தோன்றலை பின்வருமாறு கூறுகிறது,
" கெங்கைக் குலதாயை கிருஷ்ணர் வரவழைத்து
தங்கையே என்னுடைய நாமமது கேட்டதுண்டல்
பால் போல் பதம்போல் பாவந்தீர் அன்பருக்கு
சூழ்புத்தி வன்பருக்கு சூது செய் மங்கையரே"
வடக்கு வாசல் :
வடக்கு வாசல் அய்யா வைகுண்டர் தவம் செய்த இடமாகும். இங்கு வழிபட ஒரு நிலை கண்ணாடி மட்டுமே வைக்க பட்டுள்ளது. அவரவர் தங்களுக்குள்ளே இறைவனை காண வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.இங்கு பக்தர்கள் அய்யாவிடம் மாப்பு கேட்டு திருமண் எடுத்து நெற்றியில் வைப்பார்கள் .பள்ளியரையினுள் சிவமேடை அமைக்கப்பட்டு அதன் மேல் அய்யா அமர்ந்து இருப்பார்.வானுயர்ந்த கொடிமரமும், கோபுரமும் சிறப்பு மிக்கவையாகும்.திருவிழா:
ஆண்டுதோறும் மூன்று முறை திருவிழா நடைபெறும் 11 நாட்கள் நடைபெறும் விழாவில் வெவ்வேறு வாகனத்தில் அய்யா பவனி வருவது சிறப்பு. எட்டாம் நாள் குதிரையில் கலிவேட்டை ஆடி வருவது சிறப்பான ஒன்று ஆகும்.
பெட்டைகோழி சேவலாக மாறியது!
.
சிலிகுரி, மே 24: ஆண்கள் பாலியல் மாற்றம் காரணமாக அறுவை சிகிச்சையில் பெண்ணாக மாறிவிடுவது சர்வசாதாரணமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், முட்டையிட்டு குஞ்சு பொறித்த பெட்டைக் கோழி ஒன்று சேவலாக மாறி பெட்டைக் கோழிகளை தேடி சென்று வரும் சம்பவம் மேற்குவங்க மாநிலத்தில் நடந்துள்ளது.
மேற்குவங்க மாநிலம் கமட் செங்கிரபாந்தா கிராமத்தைச் சேர்ந்தவர் ஹஜிருதீன் முகமது. இவருடைய வீட்டில் கோழிகளை வளர்த்து வந்தார். அதில் கோழி ஒன்று இயற்கையாகவே ஏற்பட்ட மாறுபாடுகளின் காரணமாக சேவலாக மாறி உள்ளது. இந்த கோழி, ஆறு மாதங்களுக்கு முன்பு முட்டையிட்டு குஞ்சு பொறித்துள்ளது.அதன்பின்பு அதனிடம் சிறிது, சிறிதாக மாற்றங்கள் தென்பட ஆரம்பித்தது.
அதன் தலையில் கொண்டை வளர ஆரம்பித்தது.திடீர், திடீரென பெட்டைக் கோழிகளை துரத்தியது. பெட்டைக் கோழிக்கான தன்மை மாறி சேவலுக்கான தன்மை அதனிடம் ஏற்பட்டது தெரியவந்தது. தனக்கென ஒரு பெட்டை கோழிகள் கூட்டத்தை சேர்த்து கொண்டு திரிந்தது. அதனிடம் எந்த சேவல் அண்டினாலும் அதை கொத்தி துரத்தியது. சேவல்கள்தான் இதுபோன்று செய்யும்.
மேலும், சேவலுக்குரிய இனவிருத்தி உறுப்பும் அதனிடம் வளர ஆரம்பித்துள்ளது. இச்செய்தி பரவியவுடன் கால்நடைத் துறை அதிகாரிகள் ஹஜிருதீன் வீட்டுக்குச் சென்று, சேவலாக மாறிய கோழியை ஆராய்ந்தனர். அவர்களுக்கும் இது பெரும் ஆச்சரியமாக இருந்தது.
இந்தியாவில் இதுபோன்று கோழி ஒன்று இயற்கையாகவே சேவலாக மாறுவது இது இரண்டாவது முறை. ஏற்கனவே 20 ஆண்டுகளுக்கு முன்பு பீகாரில் இதுபோன்று ஒரு கோழி சேவலாக மாறியதாக அமெரிக்க பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகி உள்ளது தெரியவந்துள்ளது.
இந்த அதிசய சேவலை ஆராய்வதற்காக அதை தங்களிடம் தருமாறு கால்நடை துறை அதிகாரிகள் ஹஜிருதீனிடம் கேட்டனர். ஆனால், அதிசய சேவலை பார்க்க வரும் மக்கள் காசு தருவதால், அதை அதிகாரிகளிடம் தர மறுத்துவிட்டார்.
தினகரன் செய்தி:
நண்பர்களே இந்த செய்தியில் இத்தகைய சம்பவம் இரண்டு முறை நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் வேறு எங்காவது நடந்து உள்ளதா?
மூன்றாம் முறையும் நடந்து இருக்கிறது. ஆம் நண்பர்களே வேறு எங்கும் இல்லை நம் தமிழகத்தில்தான் ,திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே உள்ள மேலப்பட்டியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அருள் நூலில்,
"சாவல்கோழியல்லோ கூவுமென்றுசொல்லுவார்கள் பெட்டை
தானுமே கூவக்கண்டேன் சிவனே அய்யா"
என்று சாட்டு நீட்டோலையிலும்,
'கோவென்று பெட்டை கோழி கூவிவிடும்"
என்று நடுத்தீர்வை உலாவிலும்,
அகிலத்திரட்டில் ,
"பெட்டை கோழி சிறகுதட்டி கூவவும் தான் கண்டேனடா"
என்று அய்யா வைகுண்டர் கூறியுள்ளதை ஒருமுறை நினைத்து பாருங்கள்.அய்யா சொன்ன ஒவ்வொரு விஷயங்களும் சரியான நேரங்களில் நடந்து கொண்டே வருவதற்கு இது ஒரு சாட்சியல்லவா?
மேற்கு வங்கத்தில் நடந்தது போலவே மேலப்பட்டியிலும் நடந்துள்ளது.நான்கு முறை அடை காத்து குஞ்சு பொரித்து வந்த பெட்டைக் கோழி சிறிது நாட்களாகவே தன் உடலமைப்பிலும் ,நடத்தையிலும் மாற்றம் கண்டுள்ளது.நாளடைவில் தலையில் கொண்டை முளைத்துள்ளது.தினந்தோறும் முட்டையிட்ட கோழி தற்போது தினமும் அதிகாலையிலேயே சிறகுதட்டி கூவுகிறதாம் இந்த கோழி.
நன்றி:ayyasivachandran.com
நம் அன்றாட கடமைகள்
அய்யா வழி மக்கள் தன் வாழ்வில் தினந்தோறும் பின்பற்ற வேண்டிய கடமைகள் சிலஇங்கே...........
- அதிகாலையில் துயிலெழுதல்.
- விழித்ததும் பல் தேய்த்து முகம் கழுவி,குளித்து விட்டு ,நெற்றியில் திருநாமம் அணிந்து 5 நிமிடம் பத்மாசனத்தில் அமர்ந்து பின் 1 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும்.
- சற்று நேரம் அகிலத்திரட்டு மற்றும் அருள்நூல் படித்து விட்டு பின்,பள்ளி,கல்லூரி பாடங்களை படிக்க வேண்டும்.
- தாய்,தந்தையரை மதித்து நடக்க வேண்டும்.
- நம்மால் முடிந்த வீட்டு வேலைகளை செய்து பெற்றோருக்கு உதவ வேண்டும்.
- நம்முடைய ஆடைகளை நாமே துவைத்து உடுத்துதல் வேண்டும்.
- கடமை தவறாமையும் ,காலந்தவறாமையும் மிகவும் முக்கியமானவை ஆகும்.
- நாம் வசிக்கும் இடம்,படுக்கும் இடம்,படிக்கும் இடம் அனைத்தையும் சுத்தமாக வைக்க வேண்டும்.
- எல்லோரிடமும் அன்பாக நடந்திட வேண்டும்.
- ஒருபோதும் கோபங்கொள்ள கூடாது, கோள்வார்த்தைகள் பேசக்கூடாது,கேட்க கூடாது.
- நம்மால் முடிந்த அளவுக்கு பிறருக்கு உதவிகள் செய்ய வேண்டும்.
- பதிகள் மற்றும்,தாங்கல்களில் கூட்டு வழிபாடு செய்ய வேண்டும்.பிறருடைய நலனுக்காக அய்யாவிடம் வேண்டுதல் வேண்டும்.
- நல்ல பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும்.
- நன்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும்,உடல் ஆரோக்கியத்தை பேண வேண்டும்.
- அன்பு,தர்மம்,பொறுமை இவற்றைக் கடைபிடித்து வாழ்வின் வெற்றிப் படிகளை எட்டிப் பிடிக்க வேண்டும்.
அய்யா உண்டு
அய்யாவழி வரலாறு
(அய்யா+வழி --> தந்தையின் வழி, இறைவன் வழி) பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில், தென்னிந்தியாவின் கன்னியாகுமரி மாவட்டத்தில் சாமிதோப்பு பகுதியில் தோன்றிய ஒருமை கோட்பாட்டு சமயமாகும்.
அய்யாவழி பலவிதங்களில் இந்துசமயத்துடன் நெருங்கிய தொடர்புகொண்டுள்ள போதிலும் அய்யாவழி சமயத்தினரால் அது தனி சமயமாக நிலை நிறுத்தப்படுகிறது. அய்யாவழி மக்கள், 80 லட்சத்துக்கு மேல் இருப்பதாக கூறப்பட்டாலும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் போது இந்துக்களாக கருதப்படுவதால் இவர்களின் எண்ணிக்கை பற்றிய சரியான புள்ளிவிவரம் இல்லை.
அய்யாவழியினர் மட்டுமல்லாமல் சில புற சமூக சமய ஆய்வலர்களும் அய்யாவழியை தனி சமயமாக அங்கீகரித்துள்ளனர். அய்யாவழி தமிழகத்தின் வெளியிலும் பின்பற்றப்படுகின்றபோதிலும் தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் கேரளாவின் தென் மாவட்டங்களிலும் இதன் வளர்ச்சி மகத்தானதாகும். அப்பகுதிகளில் அய்யாவழியின் மகத்தான வளர்ச்சிக்கு கிறிஸ்தவ சபைகளின் ஆண்டறிக்கைகளே சிறந்த சான்று. இச்சமயத்தின் கொள்கைகள், போதனைகள், தத்துவக் கோட்பாடுகள், ஆகியன அய்யாவழி புனித நூற்களான அகிலத்திரட்டு அம்மானை, அருள் நூல் ஆகியவற்றிலும் அய்யா வைகுண்டரின் போதனைகளிலும் வெளிப்படுகின்றன.
அய்யாவழியின் முதன்மை புனித நூலான அகிலத்திரட்டின் படி அய்யா வைகுண்டர் கலியை அழிக்க இறைவனால் எடுக்கப்பட்ட மனு அவதாரமாகும். இவ்வழிபாட்டின் புராணத்தின் சில பகுதிகளும் , சில சமயச் சடங்குகளும் இந்து சமயதுடன் ஒத்திருக்கின்ற போதிலும், பெரும்பாலும் வேறுபட்ட கருத்துக்களே அதிகமாக வெளிப்படுத்தப்படுகின்றன. குறிப்பாக தீய சக்தி, தர்மக் கோட்பாடு போன்றவற்றில் அய்யாவழி இந்து சமயத்திடமிருந்து வெகுவாக வேறுபடுகிறது.
பொருளடக்கம்
1 பெயர் காரணம்
2 வரலாறு
3 புனித தலங்கள் மற்றும் நூல்கள்
4 சின்னம்
5 வழிபாட்டுத்தலங்கள்
5.1 பதிகள்
5.2 நிழல் தாங்கல்கள்
5.3 பதி - தாங்கல்
6 சட்டம்
6.1 நீதம்
6.2 விஞ்சை
6.3 தர்மம்
6.3.1 சமுதாய தர்மம்
6.3.2 சமயப் பார்வை
7 நம்பிக்கைகள்
8 இறைவன்
8.1 வைகுண்டர் - ஏகம் - மற்ற கடவுளர்கள் - ஆளுமை
8.2 அய்யாவழியில் இருபொருள் வாதம்
9 எழுவாய் - சான்றோர்
10 தத்துவப் பின்புலம்
11 புராணம்
12 சமயச்சடங்குகள்
13 புது வழிபாட்டு முறை
14 ஆதாரங்கள்
15 குறிப்புகள்
16 இவற்றையும் பார்க்கவும்
17 புற இணைப்புகள்
- பெயர் காரணம்
தந்தையின் பாதை -
இச்சமயம் தோன்றிய சுவாமிதோப்பு பகுதியின் தமிழ் பேச்சு மொழியில், அய்யா (தந்தை) + வழி (பாதை). எனில், தந்தையை மிகவும் நேசத்தோடு அழைக்கும் 'ஐயா' என்னும் பதத்தை இறைவனை அழைக்க பயன்படுத்தி, 'அன்புத் தந்தையின் பாதை' என்று பொருள்கொள்ளப்படுகிறது.
தலைவனின் ஒப்புயர்வற்ற வாய்மை - அய்யா (தலைவன்) + வழி (ஒப்புயர்வற்ற வாய்மை) என இப்பதங்களின் இலக்கியப் பயன்பாடுகளிலிருந்து பொருள்கொள்ளப்படுகிறது.
குருவின் வழிபாடு - அய்யா (குரு) + வழி (வழிபாடு) என கொள்ளப்படுகிறது.
இறைவனின் பாதத்தை சேரும் வழி - அய்யா என்பது (இறைவன்) + வழி என்பது (சேரும் வழி) எனவும் பொருள் கொள்ளப்படுகிறது.
மேலும் அய்யா என்னும் பதம் தமிழில், தந்தை, குரு, உயர்ந்தவர், சிறந்தவர், மதிக்கத்தக்கவர், தலைவர், அரசர், போதகர் என்றெல்லாம் பொருள்படுவதாலும், வழி என்னும் பதம் தமிழ் மொழியில், பாதை, விதம், முறை, செயல்வகை, கருத்து, இலக்கு, நோக்கம், என்றெல்லாம் பலவாறாக பொருள்படுவதாலும் இப்பதங்களின் பயன்பாடு இங்கே வரையறைக்குட்பட்டதல்ல.
- வரலாறு
அய்யாவழி சமயத்தின் தோற்றம் முதன்முதலாக நாட்டின் ஒரு அமைப்பு மக்களிடத்தும், அய்யா வைகுண்டர் முன்பு அவர்களின் சங்கமத்தாலும் உணரப்பட்டது. அவர்களில் பெரும்பாலானோர் சமூகத்தின் மிக பின்தங்கிய நிலையில் உள்ளவர்களாக இருந்தார்கள். ஆரம்பம் முதலேயே அய்யாவழியின் வளர்ச்சி கிறிஸ்தவ போதகர்களுக்கு அவர்களது பணியில் ஒரு பெரிய தடைக்கல்லாகவே திகழ்ந்ததாக லண்டன் பணிப்பரப்பு சமுகத்தின் ஆண்டறிக்கைகள் கூறுகின்றன. மேலும் அய்யாவழியின் சமுதாய வரலாற்றை படிக்க லண்டன் பணிப்பரப்பு சமுகத்தின் ஆண்டறிக்கைகள் பெரிதும் உதவுகின்றன. அய்யாவழியை பின்பற்றியவர்களில் பெரும்பாலும் நாடார் இனத்தவர்களாக இருந்த போதும் மற்ற சாதியினரும் கணிசமாக இச்சமயத்தை பின்பற்றியமைக்கு சான்றுகள் உள்ளன.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியிலெல்லாம் அய்யாவழி ஒரு சமயமாக அங்கீகரிக்குமளவு தன்னை நிலைபடுத்திக்கொண்டு விட்டது. அவ்வமயம் அதன் இருப்பு திருநெல்வேலியின் (தற்போதைய தென் தமிழ் நாடு) தென்பகுதியிலும் திருவிதாங்கூரின்(தற்போதைய தெற்கு கெரளம்) தென்பகுதியிலும் கணிசமாக உணரப்பட்டது. ஆயிரத்து எண்ணூறுகளில் அதன் வளர்ச்சி மேலும் அதிகரித்தது. குறிப்பாக அந்நூற்றாண்டின் நாற்பதுகளிலிருந்து, தொடர்ந்து வரும் ஒவ்வொரு பத்தாண்டுகளும் அய்யாவழி அசாதாரண வளர்ச்சியைக்கண்டது. அய்யா வைகுண்டர் வைகுண்டம் சென்ற பிறகு அய்யாவழி, வைகுண்டரின் போதனைகள், மற்றும் அய்யாவழியின் புனித நூல்களின் அடிப்படையிலும் பரப்பப்பட்டது. அய்யாவழியின் போதனைகளை அய்யாவின் ஐந்து சீடர்கள் நாட்டின் பல பகுதிகளுகும் சென்று பரப்பினர். இது இவ்வாறிருக்க பால் பையன் சுவாமிதோப்பு பதியை நிர்வகிக்கத்தொடங்கினார். மற்ற பதிகளை அந்தந்த பகுதிகளில் வாழ்ந்த அய்யாவழியினர் நிர்வாகம் செய்ய ஆரம்பித்தார்கள். மற்றொருபுறம் நாடு முழுவதுமாக நூற்றுக்கணக்கான நிழல் தாங்கல்கள் எழுந்தன.
இந்தியாவில் வேறெங்கும் இல்லாதளவு கொடுங்கொன்மை இங்கு இருந்துவந்ததால் சமயக்கட்டமைப்பு என்னும் இயல்புக்கு அப்பால், அய்யாவழி அப்போதைய திருவிதாங்கூரின் சமுக-வரலாற்றில் தனிமனித உரிமைகளை நிலைநாட்டும் பொருட்டு, ஒரு சீர்திருத்த அமைப்பாகவும் இயங்க வேண்டிய கட்டயத்திலிருந்தது. தீண்டாமை என்னும் கொடுமைக்கப்பால், காணாமை, நெருங்காமை ஆகியனவும் சாதிக்கொடுமையின் மருவல்களாகி வேரூன்றி இருந்தது. அத்தகைய ஒரு சமுகச் சூழலில் சாதி வேற்றுமைக்கப்பாலான மக்கள்-கலப்பை செயல்படுத்தியது அய்யாவழியின் வரவால் தென்திருவிதாங்கூரில் உடனடியாக காணப்பட்ட நிலைமாற்றம் ஆகும்.
தற்போது, பையன் வாரிசுகளில் ஒருவரான பால பிரஜாபதி அடிகளார், அய்யாவழியின் சமயத்தலைவராக கருதப்படுகிறார். அய்யாவழியின் கடந்த இரு பத்தாண்டுகள் வளர்ச்சியில் இவருக்கு மகத்தான பங்கு உண்டு. தென்னிந்தியா முழுவதுமாக ஏறத்தாழ 1000 தங்கல்களுக்கு மேல் அடிக்கல் நாட்டிய பெருமை இவருக்குண்டு. அய்யாவழியின் வளர்ச்சியை அங்கீகரிக்கும் பொருட்டு, கடந்த 1994-ஆம் ஆண்டு முதல் வைகுண்டர் அவதார தினமான மாசி 20, குமரி மாவட்டத்துக்கு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. தற்போது, இந்த ஆண்டு (2006) முதல் தமிழக அரசு நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கும் இவ்விடுமுறையை நீட்டித்திருக்கிறது.
- புனித தலங்கள் மற்றும் நூல்கள்
அகிலத்திரட்டு அம்மானை மற்றும் அருள் நூல் அய்யாவழியின் புனித நூல்கள் ஆகும். இவற்றுள் அகிலத்திரட்டு அம்மானை முதன்மை புனித நூலாகவும், அருள் நூல் இரண்டாம் நிலை புனித நூலாகவும் கருதப்படுகிறது. அய்யாவழி புராணத்தின் அடிப்படையில், உலகம் உண்டானது முதல் தற்போது நடப்பவைகளும், இனி நடக்கப்போவதுமான முக்கால சம்பவங்களை, நாராயணர் லட்சுமி தேவியிடம் கூறுவதை அய்யாவின் சீடர்களுள் ஒருவரான அரி கோபாலன் சீடர் கேட்டு, இங்கே அவைகளுக்கு எழுத்து வடிவம் கொடுப்பதாக அகிலத்திரட்டு அமைந்திருக்கிறது. இது கலியை அழிக்க இறைவன் உலகில் எடுத்த அவதாரத்தை மையப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. ஆனால் அருள் நூலின் வரலாறு தெளிவு இல்லை. ஆனால் இது அய்யாவின் சீடர்களாலும், அருளாளர்களாலும் எழுதப்பட்டவைகளாக நம்பப்படுகிறது. இன்னூலில் அய்யாவழி வழிபாட்டு-வணக்க முறைகள், சடங்கு முறைகள், அருளாளர்கள் மற்றும் சீடர்களின் தீர்க்க தரிசனங்கள், அய்யாவழி சட்டங்கள் ஆகியன அடங்கும்.
அய்யாவழி மக்களுக்கு ஐந்து முக்கிய புனிதத் தலங்கள் உள்ளன. அவைகள் ஐம்பதிகள், பஞ்சப்பதி என்றெல்லாம் அழைக்கப்படுகின்றன. அவற்றுள் சுவாமிதோப்பு பதி தலைமைப் பதியாகும். இவையல்லாமல் வாகைப்பதி மற்றும் அவதாரப்பதி ஆகியனவும் அகிலத்திரட்டில் பதி என்ற தகுதியை பெறுவதாலும் இவை ஏழும் முக்கிய புனிதத் தலங்களாகவே கருதப்படுகின்றன. ஆனால் வாகைப்பதி மற்றும் அவதாரப்பதி ஆகியவற்றை சில உட்பிரிவுகள், ஏற்றுக்கொள்வதில்லை. குறிப்பாக தற்போதைய அவதாரப்பதி எனப்படுவது, வைகுண்டர் அவதாரம் எடுத்த இடத்தில் இல்லை என்பது அவர்கள் கணிப்பு. ஆனால் அவர்களும் திருச்செந்தூரை இரண்டாம் நிலை புனித நூலாக ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் தலைமைப்பதி வெளியிடும் பதிகளின் பட்டியலில் பஞ்சப்பதிகள் தவிர்த்து மற்றவைகள் இடம்பெறவில்லை.
அவதாரப்பதி தவிர பதிகள் அனைத்தும் குமரி மாவட்டத்துள்ளேயே இருப்பதால், மொத்த மாவட்டமே அகில இந்திய அளவில் உள்ள அய்யாவழியினரால் புனிதமானதாக கருதப்படுகிறது.
- சின்னம்
அய்யாவழியின் சமயச்சின்னமாவது சுடரை தாங்கும் தாமரையாகும். இதில் தாமரை, 1008 இதழ்களை உடைய சஹஸ்ரார தள (லாடம்) பகுதியையும், சுடர் ஆன்மாவையும் குறிக்கும். அய்யாவழியின் புனித நூல்களான அகிலத்திரட்டு அம்மானையிலும் அருள் நூலிலும் திருநாமம் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஆனால் அகிலத்தின் கருத்தோட்டத்தின் கருவை ஆராயுமிடத்து அய்யாவழியின் சின்னமான நாமம் ஏந்தும் தாமரை சார்புடைய கருத்துக்கள் வெளிப்படுகின்றனவேயன்றி இச்சின்னம் பற்றிய நேரடிக்குறிப்புகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் சில வரலாற்றுக்குறிப்புகள் வாயிலாக இச்சின்னம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நாற்பதுகளிலிருந்து அய்யாவழியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்பது ஏற்கும் விதமாக உள்ளது.
அய்யாவழியின் சின்னத்தில் பயன்படுத்தப்படும் தாமரை சஹஸ்ராரச் சக்கரமாதலால் இதன் தாமரைக்கு தண்டு வரையப்படாது. ஏழு(மேல்) + ஏழு(கீழ்) என பதினான்கு இதழமைப்பு பொதுவாக வழக்கத்திலிருக்கிறது. மேலும் தாங்கல்களில் இச்சின்னத்தையே தலைகீழான தாமரை இதழ்களுடன் (சஹஸ்ராரத்தில் உள்ளது போல்) பயன்படுத்தும் ஒரு புதிய கட்டிடக் கலையமைப்பு அண்மைகாலத்தில் வழக்கத்துக்கு வந்திருக்கிறது.
அகிலத்தின் புராணவோட்டம் கூறும் எட்டு யுகத்தை தத்துவ ரீதியாக மனித உடம்பின் எட்டு ஆதாரங்கள் எனவும் கூறுவர். முதல் நீடிய யுகம் விந்து எனவும், கடைசி மற்றும் பரிபூரண நிலையான சஹஸ்ராரம் என்பது தர்ம யுகம், எனவும் இத்தத்துவம் விளக்கம் பெறுகிறது. இக்கருத்தோட்டத்தில் குண்டலினி எனப்படும் தன்னுணர்வு (சக்தி) பரஞானத்தின் துவக்கமான விந்து எனப்படும் நீடியயுகத்திலிருந்து அது பரிபூரணமடையும் சஹஸ்ராரமெனப்படும் தர்ம யுகத்தை அடையவேண்டும். அங்கே ஏகம் எனப்படும் பரிபூரண ஒருமையுடன் ஜீவான்மா சங்கமித்து, தனக்கு இனமான தனி நாமரூபம் அழிந்து, தன்னிலை கெட்டு, அதுவும் ஏகமாகிறது. ஏகமென்பது வைகுண்டம் (வைகுண்டர்) ஆதலால் வைகுண்டர் தர்ம யுகத்தை ஆள்கிறார் அல்லது வைகுண்டர் சஹஸ்ராரத்தில் ஜீவாத்மாக்களால் முழுமையாக உணரப்படுகிறார்.
மேலும் இந்து ஆகமங்களின்படி சஹஸ்ராரச் சக்கரத்தின் இதழ்களின் எண்ணிக்கை 1000 ஆகும். ஆனால் அய்யாவழி சின்னத்தில் இது 1008-ஆக கருதப்படுகிறது. காரணம் அகிலத்திலோ அருள் நூலிலோ '1000' என்பது காணப்படாத அதேபட்சத்தில் '1008' என்றவெண் திரும்பத்திரும்ப வருவதை காண முடியும். இவற்றுள் முக்கியமாக வைகுண்ட அவதார ஆண்டு கொ.ஆ 1008 ஆகும். அதனால் இப்புனித நூற்களின் குறிப்புகள் அடிப்படையில் 1008 இதழ்த்தொகுதி அய்யாவழி சின்னத்தின் பயன்படுத்தப்படுகிறது.
வழிபாட்டுத்தலங்கள்
பதிகளும் நிழல் தாங்களும் அய்யாவழி சமயத்தின் வழிபாட்டுத்தலங்களாக விளங்குகின்றன. இவைகளுள் நாட்டின் பல பகுதிகளில் அய்யாவழி பக்த்தர்களால் அமைக்கப்பட்டுள்ள நிழல் தாங்கல்கள் அய்யாவழி சமய பாடசாலைகளாகவும் திகழ்கின்றன. இவற்றுள் சில அய்யா வைகுண்டர் சச்சுருவமாக இருந்த போதே அமைக்கப்பட்டதாக கருதப்படுகிறது. 1997-ஆம் கணக்கீட்டின் படி தென்னிந்திய முழுவதுமாக 7000 நிழல் தாங்கல்கள் செயல்பட்டு வருகின்றன. அய்யாவழி ஒருங்கிணைக்கப்படாத சமயமாக இருப்பதால், சுவாமிதோப்பு பதி சமய ரீதியாக மட்டுமே தலைமைப்பதியாக விளங்குகிறது. ஆட்சி ரீதியாக அல்ல.
- பதிகள்
பதிகள் அய்யாவழியின் முக்கியமான கூட்டுவழிபாட்டு தலமாக விளங்குகின்றன. இவைகள் கோயில்களை பொன்ற பெரிய அமைப்புடையதாகும். இவற்றின் சிறப்பெனப்படுவது, அய்யா வைகுண்டரின், அவதார இகனைகள் அனைத்தும் வரலாற்றுபூர்வமாக பதிகளுடன் தொடர்புடையதாகும். இவை ஐந்து ஆகும்.
- நிழல் தாங்கல்கள்
நிழல் தங்கல்கள் பதிகளை போல் அல்லாமல் சிறிய அளவுடையதாக இருக்கும். இவற்றுள் பல அகிலத்திரட்டு பாடசாலைகளாகவும் திகழ்கின்றன. இவைகளில் அன்னதர்மமும் ஏனைய உதவிகளும் செய்யப்படுகின்றன. தமிழ்நாடு மற்றும் கேரளப் பகுதிகளிலுமாக, 8000 - க்கும் மேற்பட்ட தாங்கல்கள் செயல் பட்டு வருவதாக சில ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.[5]
- பதி - தாங்கல்
அய்யாவழியில் பதிகள் மற்றும் தாங்கல்களில் வேறுபாடு அகிலத்தின் அடிப்படையில் பகுக்கப்படுகிறது. ஒரு பகுதியை பதி என்று அழைக்க இரண்டு விதிமுறைகள் உள்ளன. அவை,
அது அகிலத்திரட்டில் பதி என்ற தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
அது அய்யாவின் அவதார இகனையுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும்.
சட்டம்
அய்யாவழியின் வாழ்வியல் மற்றும் இறையில் சட்டங்கள் அகிலம் முழுவதுமாக பரவலாக கணப்படுகிறது. இது இறைவனால் துறவிகளிடமோ, தேவர்களிடமோ, கீழ்நிலை கடவுளர்களிடமோ அவர்களின் கேள்விகளுக்கேற்றவாறு கூறப்படுவதாக புராணத்தொகுதியின் கூடே பின்னப்பட்டு இடையிடையே நூல் முழுவதும் சிதறுண்டு காணப்படுகிறது.
அருள் நூல் இவ்வகையில் ஒரு தொகுப்பு நூலாக கருதப்படுகிறது. முதன்மை புனித நூலான அகிலம் கூறும் கோட்பாடுகள் இந்நூலில் விரிவாக விளக்கப்பட்டிருக்கின்றன. அருளாளர்களின் தீர்க்கதரிசனங்கள், அழிவு விபரங்கள், சமய-சமுக சட்டங்கள் ஆகியனவற்றை இந்நூல் உள்ளடக்குகிறது.
- நீதம்
அய்யாவழி சட்டங்களில் நீதம் முதன்மை இடம் வகிக்கிறது. எட்டு யுகச்செய்திளை தொகுத்து விளக்குமிடத்து பழங்காலத்தில் நீதம் எவ்வாறு மக்களால் கடைபிடிக்கப்பட்டது என்பது விளக்கப்படுகிறது. அன்றைய சமுதாயம், அதனை ஆண்ட மன்னன் ஆகியவர்கள், தங்கள் செயல்களில், தங்களுக்கப்பாலுள்ள இறைவனை நிலைநிறுத்தி இயற்கையோடியைந்த நிலையில் வாழ்ந்த விதம் இந்நூலில் சிறப்பாக விளக்கப்படுகிறது. நீதம் மூன்றாக பகுக்கப்பட்டுள்ளது.
மனு நீதம் - சமுதாயத்தில் தனிமனிதனின் கடமைகள்.
ராச நீதம் - ஆட்சி புரியும் மன்னனுக்கான கடமைகள்.
தெய்வ நீதம் - இறையியல் சட்டங்கள் மற்றும் கடமைகள்.
அக்காலத்து இந்த சிறப்பு நிகழ்வுகள் உவமையாக கூறப்பட்டு அதை சட்டவடிவாக கொண்டு வாழ்வியல் கோட்பாடாக இன்று இக்கலியுகத்தில் பின்பற்றப்பட வேண்டும் என கூறப்படுகிறது. கலியுகத்தின் துவக்கத்திலும் வைகுண்ட அவதார துவக்கத்திலும் பொது நிலைமாற்றங்கள் நிகழ்வதால் அவற்றிலிருந்து சில கோட்பாடுகள் மாற்றம் பெருகின்றன. அவ்வாறு நிகழும் மாற்றங்கள் பின்னர் அவதாரத்தின் போது வைகுண்டரால் போதிக்கப்படுகின்றன.
- விஞ்சை
நாராயணரால் வைகுண்டருக்கு அளிக்கப்படும் உபதேசம் மற்றும் சட்டம் அகிலத்தில் விஞ்சை எனப்படுகிறது. வைகுண்டருக்கு மூன்று முறைகளாக கடலின் உள்ளாக கொடுக்கப்பட்டிருக்கும் இவ்விஞ்சையின் முதல் பகுதி அவதாரம் எடுத்த உடனேயும், மற்ற இரண்டு பகுதிகளும் சில அவதார நிகழ்வுகளுக்குப் பிறகும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது தந்தையாகிய அதிகாரக்கடவுள் மகனாகிய அவதாரக் கடவுளுக்கு அளிக்கும் இறை சட்டம் என்றாலும் இதில் அடங்கும் பல பகுதிகள் மனிதனின் வாழ்வியல் சட்டங்களாகவும் பின்பற்றப்படுகிறது. முதல் விஞ்சையாகிய திருச்செந்தூர் விஞ்சை அகிலத்தின் மிக நீளமான சட்டத்தொகுதியாகும்.
- தர்மம்
தர்மக் கோட்பாடு அகிலத்தில் இரண்டு கோணங்களில் விளக்கம் பெறுகிறது. தர்மத்துக்கு சமுதாய உருவம் கொடுப்பதாக முதல் பார்வையும் சமய விளக்கம் கொடுப்பதாக இரண்டாம் பார்வையும் அமைந்திருக்கிறது. சமுதாயப்பார்வையில் தர்மம் என்பது எளியோருக்கு உதவுவதெனவும் சமய விளக்கத்தில் அத்தர்மம் சீவன் பரநிலையடையும் இயல்பு எனவும் குறிக்கிறது. மேலும் தர்மத்தின் இரண்டாம் நிலையை அடைய முதல் நிலை பின்பற்றப்படவேண்டியது அவசியம் என்கிறது அகிலம்.
- சமுதாய தர்மம்
தர்மத்தின் சமுதாய விளக்கம் எளியோரை மேலாக்குவது எனப்படுகிறது. அகிலம் இதை "தாழக்கிடப்பாரை தற்காப்பதே தர்மம்." என்கிறது. சமுதாயத்தில் நிலவும் எளியோர்-வலியோர், உயர்ந்தோர்-தாழ்ந்தோர், ஆகிய வேற்றுமைகள் இதனிமித்தம் களையப்பட வேண்டுமென்கிறது அகிலம். அதன் முதல் மற்றும் மேலான நிலையாக அன்ன தர்மம் கருதப்படுகிறது. "பயந்து தர்மமிட்டந்த பரம்பொருளைத் தேடிடுங்கோ." என்கிறது அருள் நூல். இதன் மூலம் ஒருவரிடமும் வேறுபாடில்லாமல் தான-தருமங்களை செய்ய சமுதாயம் அறிவுறுத்தப்படுகின்றது. மேலும் பிரபல இந்தியத் துறவியான சுவாமி விவேகானந்தர் சமுதாய அறத்தையே முதன்மை தர்மமாக சித்தரிப்பது அய்யாவழியில் அவர் ஈடுபாடு கொண்டிருந்தார் என்னும் கருத்தை உறுதி செய்வதாக அமைகிறது.
- சமயப் பார்வை
சமயப் பார்வையில் திருப்புகையில் தர்மம் என்பது அறிவுக்கு அப்பாலான "முழுமுதல் உண்மை" என சித்தரிக்கப்படுகிறது. மேலும் வைகுண்டரின் முக்கிய அவதார நோக்கம் கலி என்னும் மாயையை அழித்து உலகில் தர்மம் என்னும் மெய் இயல்பை உருவாக்குவதேயாம். ஆக அய்யாவழி சமய தர்மம் என்பது இயற்கையோடியைந்து காலம் இடம் என்னும் வரையறைக்கப்பாலான 'இருப்பதனைத்தும் ஒன்று' என்னும் மெய் நிலையேயாகும். ஏகம் என்னும் பதத்தின் பயன்பாடு துவக்கம் முதலே அகிலத்தில் அதிகமாக காணப்படுவது இதனை உறுதி செய்கிறது. அவ்வாறான மெய்யுலகு வைகுண்டரால் ஆளப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் வருணாசிரம தர்மத்தை இவ்யுகத்துக்கு பொருந்தாதது என நிராகரிக்கிறது. இதனை அகிலம், கீழ்க்கண்டவாறு கூறுகிறது.
"சாதி பதினெட்டையும் தலையாட்டிப்பெய்களையும்
வாரிமலை வன்னியில் தள்ளி அழித்துவிடு."
- நம்பிக்கைகள்
அய்யாவழியின் புனித சின்னம், திருநாமம் ஏந்தும் தாமரைஅய்யாவழி மறுபிறவி கொள்கையையும் தர்ம யுகத்தையும் ஏற்றுக்கொள்கிறது. ஆனால் இந்து சமயத்தின் வருணாஸ்ரம தர்மம் என்னும் ஜாதி முறையை இவ்வுகத்துக்கு பொருந்தாதது என நிராகரிக்கிறது. மூர்த்தி வழிபாட்டையும் அய்யாவழி ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் பாமார மக்களும் வழிபட ஒரு உருவத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து அய்யாவழியில் இறைவன் அமர்வதர்க்கான இருக்கையாக, பள்ளியறையில் ஆசனம் அமைக்கப்பட்டு, அவ்வாசனத்தில் அய்யா அரூபமாக அமர்ந்திருப்பதாக உணர்த்தப்படுகிறது. அய்யாவழி, சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளையும் ஒப்பற்ற ஒரே கடவுளின் மாறுபட்ட வடிவங்களாக காண்கிறது. இவ்வகையில் அய்யாவழி அத்வைதம் மற்றும் சுமார்த்தம் ஆகியவைகளை ஒத்திருக்கிறது. அய்யாவழி துவைதம் மற்றும் விசிஷ்டா துவைதம் ஆகிய கோட்பாடுகளுடன் ஒத்திருப்பதாகவும் கருத்துகள் உள்ளன. மேலும் அய்யாவழி ஏகத்துவத்தை வலியுறுத்துகிறது.
அய்யாவழி தீய சக்தியின் மொத்த ஒருங்கிணைந்த உருவமாக குறோணி என்னும் அசுரனை உருவகிப்பதன் மூலம் இந்து மதத்திடமிருந்து வெகுவாக வேறுபடுகிறது. ஆறு துண்டுகளாக வெட்டி அழிக்கப்பட்ட குறோணி, பின்வரும் ஒவ்வொரு யுகங்களிலும் ராவணன், துரியோதனன் என அசுரப்பிறவிகளாகப் பிறக்கிறான். அவர்களை அழிக்க விஷ்ணு, அந்தந்த யுகங்களில் ராமன், கிருஷ்ணன் மற்றும் கடைசியாக வைகுண்டராக அவதரிக்கிறார்.
தற்போதைய கலியுகத்தில் குறோணியின் ஆறாவது துண்டான கலி மாயையாக உலகத்தில் பிறக்கிறான். அக்கலியனை அழிக்க ஏகப்பரம்பொருளான இறைவன் வைகுண்ட அவதாரம் கொள்கிறார். ஆக வைகுண்டர் அவதாரம் எடுத்த உடனேயே கலி அழியத்தொடங்கி தற்பொது அழிந்துகொண்டிருப்பதாக அகிலம் கூறுகிறது.
அன்ன தர்மம் அய்யாவழியில் முக்கிய பங்கு வகிக்கிறது. பெருவாரியான நிழல் தாங்கல்களில் மாதத்துக்கு ஒரு முறையாவது அன்ன தர்மம் செய்கிறார்கள்.
சம்பூரண தேவன் மற்றும் பரதேவதையின் பிறப்பு
சம்பூரண தேவன் மற்றும் பரதேவதையின் பிறப்பு
சம்பூரண தேவனும் பரதேவதையும் அகிலத்திரட்டில் முக்கிய இடம் வகின்றனர்.பகவான் விஷ்ணு ஏழுலோக தேவர்களையும் தன் அவதார நோக்கத்திற்காக கலியுகத்தில் படைக்க திட்டமிடுகின்றார். அதன்படி ஏழுலோகதேவர்களும் அதற்கு சம்மதித்து பிறக்கலாயினர் .ஆனால் சொர்க்கலோகத்தை சேர்ந்த சம்பூரண தேவன் எமலோகத்தை சேர்ந்த பரதேவதை என்ற பெண் மீது கொண்ட காதலால் பிறக்க மறுக்கிறான் .அவளையும் தன்னோடு சேர்த்து பிறக்க செய்ய வேண்டும் என்கிறான்.அதை கேட்ட விஷ்ணு எமகுலத்தை சேர்ந்த பெண்ணை மணக்க இருவரும் சேர்ந்து ஒரு தவம் செய்ய வேண்டும் எனவும் அத்தவதில் நீ நினைப்பவைஎல்லாம் கிட்டும் என்றும் கூறி அனுப்புகிறார். அதனை அகிலம்,
சம்பூரண தேவனின் மறுப்பு
"மூவருரை மாறாமல் மூர்க்கமுள்ள தேவரெல்லாம்
போகும் பொழுதில் பொன்னுலகத் தேவர்தன்னில்
தாவும்பெரிய வொரு சம்பூரணத் தேவன்
பரதேவதை யான பார்மறலி தன்னுகத்தில்
உரமான தேவியவள் உடைய மன்னனைநீக்கித்
தெய்வச்சம் பூரணனுஞ் சேர்ந்தவளோடே நடப்பாள்
மாயவளை மாய்கையினால் மாறியவன் பேசினனே
நான்பிறக்கப் போணுமென்றால் நண்ணுதலை என்னோடு
தான்பிறக்கச் சொல்லித் தாரம் போலாக்குவீரால்
நான்பிறக்கப் போவேன் நாரணரே யல்லாது
தான்பிறக்கப் போவதற்க்குச் சங்கடங்க லுண்டும்மையா"
நாராயணர் தவம் செய்ய சொல்லல்
"கீழுள்ள பெண்ணை மேலாக்க வேணுமென்றால்
வேளமொத்த தேவா மிகுந்ததவஞ் செய்திடுநீ
மேலாக வேணுமென்று மேல்லியரும்னல்தவசு
காலால் கனலேழுப்பிக் கடுந்தவசு செய்திடச்சொல்
தவசியிரு பெரும் தார்பரியமாக நின்று
சிவசுவசம் பெருக்கி சிறந்ததவம் செய்டிடச்சொல்
நின்ற தவத்தில் நிலையை நினைத்ததெல்லாம்
அன்றுங் களுக்கு அருளுவே நானுமேன்று
சொல்லிடவே தேவன் சிரித்து மனமகிழ்ந்து"
என்றுரைக்கிறது.
இவ்வாறு தேவனும் ,தேவதையும் தவத்தில் நின்ற போது அதனை சோதிக்க விஷ்ணு,தன்னுடன் சிவன் மற்றும் இந்திரனை அழைத்து வந்தார்.அப்போது இந்திரன் தன் தலையில் விஷ்ணுவின் இரத்தின திருமுடியை அணிந்திருந்தான்.அதைக்கண்ட சம்பூரண தேவன் தன்னைமறந்து திருமுடியின் மீது ஆசைக் கொண்டு தன் தேவியிடம் கண்களால் பேசினான்."பெண்ணே நான் அந்த திருமுடியை அணிந்து சிம்மாசனத்தில் உன்னுடன் அமர்ந்து கன்னியர் பெற்ற சான்றோர்களை ஆட்சி செய்ய வேண்டும் என்றான்"இவ்வாறு மனம் தடுமாறிய சம்பூரண தேவனிடம் விஷ்ணு நீயும் ,பரதேவதையும் பூமியில் பிறந்து ,பரதேவதை தன் முதல் கணவனை பிரிந்து உன்னுடன் வந்து வாழ்வாள்,பின்னும் நீ சில காலம் முன்வினை பயனால் நோய்வாய்ப்பட்டு பின் உன்னுள் நீயே நானாகி தருமலோகம் ஆழ வைப்பேன் என்று கூறி இருவரையும் பூமியில் பிறவிசெய்தனர். சம்பூரண தேவனின் ஆசை
"கண்டு சம்பூரணனுங் கைமறந்து நிஷ்டையது
பண்டு மையலாய்ப் பாவையோ டேதுரைப்பான்
மானே கேளிந்த வானவர்கோன் தன்சிரசில்
தானாகிய மான சங்குசரத் தங்கமுடி
என்தலையி லேவைத்து ஏந்திழையே உன்னோடு
தென்தலைவ ரத்தினச் சிங்கா சனமீதில்
இருபேரும் வாழ்ந்து இராச துரைத்தனமாய்ப்
பெருக்கான தெய்வகன்னி பெற்ற மனுவழியை
எல்லா மருகிருத்தி ஏற்றவொரு சொல்லதுக்குள்
வல்லான நீத வையகத்தை ஆண்டிருந்தால்"
பின் சம்பூரண தேவன் பூமியில் முத்துக்குட்டி என்னும் பெயரோடு தற்போதைய சாமிதோப்பு ஊரில் பிறக்கின்றார்.பரதேவதையும் அவ்வாறே எம வழியில் பிறந்து முன்வினையால் முதல் கணவனுக்கு ஊழியம் செய்து பின் முத்துக்குட்டியை மணக்கின்றாள்.அவளின் பூலோகப் பெயர் திருமாலம்மாள் ஆகும் .
இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் சம்பூரணதேவனை சோதிக்க ஏன் இந்திரன் திருமுடி சூடி,விஷ்ணுவுடன் வர வேண்டும்,சம்பூரண தேவனை முடியின் மீது இச்சைக் கொள்ள வைக்க வேண்டும். என்னென்றால் தவத்தில் நினைப்பதை தருவதாக விஷ்ணு கூறினார். எனவே இவ்வாறு தேவனை நினைக்க செய்கின்றார்.ஏன்னெனில் கலியை மூவராலும நேரடியாக நின்று அழிக்க முடியாது எனவே விஷ்ணு கலியழிக்க எடுத்து கொண்ட ஆயுதம் தான் சம்பூரண தேவன்.இதனை அகிலம்,
"மாமுனியே நீகேளு வஞ்சக நீசக்கலியை
நான்முனின்று கொல்ல ஞாயமில்லை கேட்டிடுநீ"
"முனின்று கொல்ல மூவரா லுமரிது
பின்னின் றவனவனால் பேசாதே மாழவைப்பேன் "
என்கிறது.
அன்புக்கொடி கிராமமும் ஆடும் வாகனமும்......
என்னதான் கடவுள்மீது அதிகமான பக்தி இருந்தாலும் சிலர் சில நேரங்களில் கலியின் பிடியில் சிக்கி பல தவறுகளை செய்துவிடுகிறார்கள்.இன்னும் பலர் ஏதோ கடமைக்கு கடவுளை வணங்கி விட்டு தன் வழியிலேயே போய் கொண்டு இருப்பார்கள்.இன்னும் பலர் கடவுளை கண்டு கொள்வதே இல்லை,கடவுள் இல்லை என்று சொல்பவர்களும் உண்டு.
இத்தகைய கலி சூழ்ந்த இந்த உலகில் ,விஞ்ஞான மயமான இந்த உலகில் கடவுளை மட்டுமே நம்பி வாழும் மக்கள் உள்ளனர் என்றால் நம்ப முடிகிறதா?நம்பிக்கை என்றால் சாதாரண நம்பிக்கையல்ல அவர்களுக்கு எல்லாமே இறைவன்தான்.வீட்டில்,ஊரில் என எங்கு என்ன பிரச்சினை வந்தாலும் இறைவனிடமே கூறி முறையிட்டு நல்ல முடிவுகளையும் பெற்று செல்கிறார்கள்.அண்ணன் தம்பி பிரச்சினையா ,சொத்து தகராறா,பணபிரசினையா,உடல், நோய் சார்ந்த பிரச்சினையா அனைத்தையுமே இறைவனிடம் முறையிட்டு நல்ல தீர்வு கண்டு செல்கிறார்கள்.
இத்தகைய மக்கள் எங்கு வாழ்கிறார்கள் இவர்களின் நம்பிக்கைக்கு ஆதாரமிட்ட இறைவன் யார் என பார்ப்போமா?
இம்மக்கள் வேறு எங்கும் இல்லை திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் அருகே உள்ள அழகிய ,பசுமையான கிராமமான அய்யனார் குளத்தில் தான் இத்தகைய மக்கள் வாழ்கிறார்கள்.இவர்கள் நம்பி வழிபடும் ,இவர்களுக்கு நல்ல தீர்ப்பு வழங்கும் இறைவன் யார்? அவர் வேறு யாருமல்ல செந்தூர் கடல் நாயகன்,தெற்றனத்து தேவன் அய்யா வைகுண்ட பரம்பொருளே ஆவார்.இங்கு அப்படி என்ன அதிசயம் நடக்கிறது என்று கேட்கிறிர்களா?சொல்கிறேன் இங்கு வாழும் மக்கள் வைகுண்டரே உண்மையான தெய்வம் என்ற நம்பிக்கையோடு வாழ்கிறார்கள்,மக்களுக்கு ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் அய்யாவே தீர்ப்பு சொல்கிறார்,அந்ததீர்ப்பை மக்களும் ஏற்று கொண்டு அதன் படியே வாழ்கிறார்கள்.இங்கு வைகுண்டரின் காவிக்கொடியை தவிர வேறு எந்த அரசியல் கட்சிகளின் கொடிகளும் பறப்பதில்லை.இவ்வூரில் உள்ளவர்கள் மட்டுமல்ல அருகிலுள்ள கிராமங்களை சேர்ந்த மக்களும் அய்யாவை நம்பி வந்து குறைகளை தீர்த்து செல்கிறார்கள்.அய்யாவின் அருளால் இவ்வூரில் எந்தவித பஞ்சமும், தட்டுபாடும் விளைவதில்லை.மக்களின் மனம் போலவே பயிர்களும் செழித்து வளர்கின்றது.
மேலும் ஒரு அற்புதமான சிறப்பை அய்யா கொடுத்திருக்கிறார்,திருவிழாவின் போது அய்யா அமர்ந்து வரும் வாகனம் தானாகவே ஆடுகின்றது.மற்ற கோவில்களில் எல்லாம் வாகனத்தை தூக்கி செல்பவர்கள் தான் அதனை ஆட்டுவார்கள் ஆனால் இங்குதான் வாகனம் ,தூக்கி செல்பவர்களை ஆட்டும் அதிசயம் நடக்கிறது.
இவ்வூரில் உள்ள பதிக்கு துலங்கும் பதி துவரயம் பதி என பெயர் சூட்டி உள்ளனர்.இப்பதிக்கு திருப்பதியை போன்ற சிறப்பை தருவதாக அய்யா அருள்வாக்கு கூறியிருக்கிறாராம்.திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அய்யா பதிகளில் மிகவும் சிறப்பு வாய்ந்த பதி இதுவாகும்.வாரந்தோறும் வெள்ளி,ஞாயிறு கிழமைகளில் கணக்கு நடக்கிறது இதில் பெருபான்மையான மக்கள் கலந்து அருள்வாக்கு பெற்று செல்கின்றனர்.உடல்நலம் பாதிக்க பட்டோர்கள் இங்கு தங்கி குணமடைந்து செல்கிறார்கள்.இத்தகைய சிறப்புமிக்க பதிக்கு சென்று வாகன ஆட்டத்தை நாமும் பார்த்து வரலாமே!
அய்யா உண்டு
அஞ்சாமல் பிடித்திடுங்கோ அடங்கிடுவார் அக்குருவும் !
அய்யா உண்டு
அன்புக்கொடி மக்களே தலைப்பை பார்த்து விட்டு இதை பற்றி என்ன இருக்கும் என யோசிக்கிறீர்களா ?பெரிய அளவில் இல்லா விட்டாலும் எதோ எனக்கு தெரிந்தவற்றை எழுதுகிறேன்.
இன்று உலகில் வாழும் பெருபான்மையான மக்கள் கடவுளை ஏதோ வணங்க வேண்டுமே என்பதற்காகவே வணங்குகின்றனர் .காரணம் இறைவனின் மீது நம்பிக்கையில்லை,நம் முன்னோர்கள் சொல்லி விட்டார்களே என்பதற்காகவே பல பேர் கடவுளை வணங்குகின்றனர்,இன்னும் சில பேர் உண்டு ஏதேனும் ஒரு கடவுளை வணங்குவார்கள் மிகவும் பயபக்தியோடு தொழுவார்கள்,அவர்களை விட பக்தியானவர் இல்லை என என்னும் அளவுக்கு இருப்பார்கள்.அப்படி பக்தியாய் இருந்தவர்கள் தன் வாழ்வில் ஏதேனும் சோகமான சம்பவம் நிகழ்ந்து விட்டால் போதும் ஆகா இந்த இறைவன் நம்மை காக்க வில்லையே இவனையா நாம் இவ்வளவு நாளாய் வணங்கினோம் ,பதிலாக வேறு தெய்வத்தை வணங்கி இருந்தால் கூட நாம் காப்பாற்ற பட்டிருப்போமே தவறு செய்து விட்டோமே என எண்ணி தெய்வத்தை குற்றம் சொல்லி மாற்றி விடுவார்கள். இப்படிப்பட்டவர் தன் வாழ்வில் சோகமே வர கூடாது என்று நினைப்பார்கள் போலும். தேவர்கள் வாழ்வில் சோகமே இல்லாமல் இருந்ததன் விளைவு தானே இந்த கலியுகம் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் .வாழ்வில் துன்பமே இல்லாத தேவர்கள் இறைவனை மதிக்கவில்லை விளைவு குறோணி என்ற அசுரனின் பிறப்பும் ,இன்றைய கலியின் கொடுமையும் ஆகும்.வாழ்வில் துன்பம் இல்லை என்றால் இறைவனுக்கு மதிப்புதான் என்ன,அவனை நினைப்பதற்கே நேரம் இன்றி போய்விடுமே!துன்பம் வரும்போது தான் மனிதனுக்கு இறைவனின் நினைப்பே வருகிறது.எத்தனை துன்பம் வந்தாலும் இறைவனை நினைத்துக்கொண்டே இருக்கும் ஒருவனே சிறந்த பக்தனவான்,பல இன்னல்களையும் துயர்களையும் தாண்டினால்தான் இறைவனை அடைய முடியும். இதைத்தான் அருள் நூல்,
"அஞ்சாமல் பிடித்திடுங்கோ அடங்கிடுவார் அக்குருவும் !"
வாழ்வில் எத்தனை சோகங்கள் துன்பங்கள் வந்தாலும் ஒரு நினைப்பாய் இறைவனை மனதில் நிறுத்தி எந்த வெறுப்பும் இன்றி தன் தாயாகவோ, தந்தையாகவோ ,சிறந்த நண்பனாகவோ எண்ணி இறைவனை பிடித்தால் நம் அன்புக்கு இறைவன் அகப்படுவான்,அடங்குவான் என்பதே இவ்வரியின் அர்த்தமாகும்.அதை விட்டு இறைவனுக்கு தேவையில்லாத காணிக்கைகள்,காவடிகள்,வைத்து புண்ணியமில்லை இதைத்தான் அய்யா,
"அன்பு மலரெடுத்து அனுதினமும் பூசை செய்தால் அய்யா நான் வருவேன்"
என்கிறார்.
மேலும் அய்யா
"பக்தி மறவாமல் பதறாமல் நீயிருந்தால்
புத்தி சொல்ல நான்வருவேன் புலம்புவேன் என்மகனே!"
என்கிறார்,
உண்மையான பக்தியுடன் எந்த தீய சக்திகளுக்கும் பயப்படாமல் வைகுண்டமே துணை என்ற ஒருமனதோடு இருக்க வேண்டும் என்கிறார்,அவ்வாறு இருந்தால் பல புத்திமதிகளை கூறி ஆபத்திலிருந்து காக்க நான் வருவேன் என்மகனே என்கிறார்.
ஆனால் இன்றைய காலத்தில் சிலர் பகலில் கடவுளிடம் பிரச்சினைகளை கூறி இறைவா என்னை கப்பாட்ட்று என முறையிடுவார்கள்.அவர்களே பொழுது சாய்ந்ததும் இறைவனை மறந்து மந்திரவாதிகளிடம் சென்று முறையிட்டு அழுவார்கள்.இதற்கு ஏன் இறைவனை வணங்க வேண்டும்.செய்வினைகாரனையே வணங்கலாமே!
மக்களை காப்பதற்கு மக்களுள் ஒருவராகவே தோன்றி மக்களுக்காய் அடிகள் பட்டு,பல சோதனைகளையெல்லாம் சாதனைகளாக்கி தாழ்ந்து கிடந்த மக்களையெல்லாம் இன்று நல்ல நிலைமைக்கு உயர செய்து கலியின் கொடுமைகளையெல்லாம் விவரித்து,அதிலிருந்து தப்பும் வழிகளையும் கூறிய உண்மையான இறைவனை விட்டு கலியை நிலை என்று நம்பி செல்லும் மக்களை வைகுண்டர்தான் நல்லபுத்தி ஈந்து காக்க வேண்டும்.
அய்யா உண்டு
பாம்பாக மாறிய பாம்படம்
தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம் அருகே உள்ள அந்த கிராமத்தின் பெயர் வேப்பங்காடு. இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் பாலையா-உமய பார்வதி தம்பதியினர். இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகளளும், 2 பெண் குழந்தைகளும் இருந்தனர். கடைசி குழந்தை பிறந்த சில மாதங்களில் பாலையா இறந்து விட்டார்.
உமய பார்வதிதான் கூலி வேலை செய்து குழந்தைகளை காப்பாற்றி வளர்த்து வந்தார். கூலி வேலையின் மூலம் கிடைக்கும் வருமானம் அவருக்கு போதவில்லை. அதனால், அவரது குடும்பம் வறுமையில் தத்தளித்தது.
இதையடுத்து, நெல் வியாபாரிகளிடம் இருந்து 20 படி நெல்லை வீட்டிற்கு வாங்கி வந்து, அதை புழுங்கல் அரிசியாக்கி, அதில் 10 பிடி அரிசியை நெல் வாங்கிய வியாபாரிகளிடம் கொடுத்துவிட்டு, மீதமுள்ள ஓரிரு படி அரிசியைக் கொண்டு கஞ்சிக் காய்ச்சி பிள்ளைகளுக்கு கொடுத்தார்.
காலம் வேகமாக ஓடியது. உமய பார்வதிக்கு வயது 42ஐ தொட்டது. ஆனால், குடும்ப வறுமை மட்டும் ஓய்ந்த பாடில்லை."இறைவா! எத்தனை நாட்களுக்குத்தான் நாங்கள் இப்படி வறுமையில் தவிப்போம். எங்களுக்கு கொஞ்சமாவது கருணை காட்ட மாட்டாயா?"என்று பல நாட்கள் அவள் அழுது புலம்பியது உண்டு.
இந்நிலையில், சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் மகிமைகள் பற்றி கேள்விப்பட்ட அவள், நேராக சாமிதோப்பு நோக்கி புறப்பட்டாள். மூத்த மகனையும், ஒரு கைக்குழந்தையையும் உடன் அழைத்துச் சென்றாள்.
அந்தக் காலத்தில் வாகன வசதி கிடையாது என்பதால் பனங்காடுகள் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தாள். சுமார் 50 மைல் தூரம் நடக்க வேண்டியது இருந்தாலும் அதுபற்றி கவலைப்படாமல் பயணத்தை தொடர்ந்தாள்.ஓரிடத்தில், எதிரே வந்த குடிகாரர்கள் இரண்டுபேர் அவளை வழிமறித்தனர்."வைத்திருக்கும் பணத்தை கொடு" என்று கேட்டு அவர்கள் மிரட்டினர்.
"என்னிடம் பணம் எதுவும் இல்லை" என்று அவள் அழுது புலம்பியபோது, அவள் காதுகளில் கிடந்த பாம்படத்தைக் (ஒருவகை தங்கக் காதணி/ சில இடங்களில் தண்டட்டி என்றும் சொல்வதுண்டு) கவனித்தனர் அந்த குடிகாரர்கள்.
"பணம் எதுவும் இல்லை என்று சொல்கிறாய். ஆனால், காதுகளில் பாம்படம் கிடக்கிறதே; அதை கழற்றிக்கொடு. இல்லையென்றால், காதை அறுத்து எடுத்துக் கொள்வோம்" என்று மிரட்டினர் அவர்கள்.
"என் குடும்ப சூழ்நிலை புரியாமல் பேசுகிறீர்களே. சாப்பிடக்கூட வழி இல்லாத என்னிடம் மீதம் இருப்பது இந்த பாம்படங்கள்தான். இதையும் நீங்கள் கேட்டால், நான் எங்கே போவேன்?" என்று கூறியபடியே மீண்டும் அழுதாள்.
தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சினாள். அவளது பிள்ளைகள் குடிகாரர்களை மிரட்டிய மாத்திரத்தில் அழ ஆரம்பித்து விட்டனர்.
"இனி உன்னிடம் பேசி பலனில்லை. ஒரே போடாக போட்டு கொன்றால்தான் எங்களுக்கு பாம்படம் கிடைக்கும்" என்று அவர்கள் சொன்னபோது, அவள் அதிர்ந்தே போய்விட்டாள்.அந்த இடம் நடு காட்டுப்பகுதி என்பதால் அடுத்தவர்களின் உதவியைக்கூட அவளால் எதிர்பார்க்க முடியவில்லை.கடைசியில், வேறு வழியில்லாமல் தனது இரு பாம்படத்தையும் அந்த குடிகாரர்களிடம் கழற்றிக் கொடுத்தாள்.
பாம்படத்தை பறித்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.உமய பார்வதிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. குழந்தைகளை அணைத்துக்கொண்டு அழுதாள்.
"அய்யா! உம்மைத் தரிசிக்க வந்த எனக்கு இப்படி சோதனைகள் வர வேண்டுமா? இந்த பாம்படத்தை விற்று எனது பிள்ளைகளுக்கு கஞ்சிக் காய்ச்சிக் கொடுத்தால் ஒரு மாத காலமாவது வயிறார குடித்திருப்பார்களே!" என்று அய்யா வைகுண்டரிடமே முறையிட்டாள்.
இருந்தாலும், நம்பிக்கையை தளர விடாமல் அய்யாவை தரிசிக்கும் பொருட்டு சாமிதோப்பு நோக்கி வேகமாக விரைந்தாள்.சாமிதோப்பை அடைந்தாள்.அங்கே அய்யாவை அவள் கண்டபோது அவளது கவலைகள் எல்லாம் சூரியன் கண்ட பனியாய் விலகியதுபோல் இருந்தது. அவளை அறியாமல் கண்களில் இருந்து கண்ணீர்த் துளிகள் பெருக்கெடுத்தன.
கூப்பிய கரங்களோடு அய்யாவின் பாதத்தில் விழுந்து அழுதாள். தன் குறைகளையும், வறுமை நிலையையும் சொல்லி முறையிட்டாள். வழியில், பாம்டத்தை பறிகொடுத்த கதையையும் சொன்னாள்."அம்மா! இனி நீ அழ வேண்டாம். உன் பாம்படம் அவனுக்கு பாம்பாகிப் போச்சு. அதுவே உனக்கு பாக்கியமாச்சு" என்றார். இதைகேட்ட மாத்திரத்தில் அய்யாவின் திருப்பாதங்களை கட்டிப் பிடித்துக்கொண்டு அழுதாள் உமய பார்வதி. தொடர்ந்து, அய்யாவின் பாதங்களைத் தொட்டு எழுந்த அவளது முகத்தில் ஒருவித மலர்ச்சி தென்பட்டது.
அருகில் இருந்த திருமண்ணை எடுத்து அவளுக்கும், குழந்தைகளுக்கும் கொடுத்து நெற்றியில் நாமமிட்டுக் கொள்ளுமாறும், அங்குள்ள முந்திரிக் கிணற்றில் குளித்துவிட்டு வருமாறும் பணித்தார் அய்யா.
இதையடுத்து, உமய பார்வதி தனது குழந்தைகளோடு முந்திரிக் கிணற்றை நோக்கிச் சென்றாள்.அவள் சென்ற சிறிது நேரத்தில் அய்யாவின் இருப்பிடத்தைத் தேடி ஒருவர் வேகமாக ஓடி வந்தார். அவர் கீழ் மூச்சு மேல் மூச்சு வாங்கியதில் இருந்தே, எத்தகைய பரபரப்போடு ஓடி வந்திருக்கிறார் என்பதை புரிந்துகொண்டார் அய்யா.
வேகமாக வந்தவர் தன்னிடம் இருந்த இரு பாம்படத்தையும் அய்யாவின் காலடியில் வைத்து, வந்த பரபரப்பு அடங்காமலேயே பேசினார்."அய்யா! இந்த பாம்படங்களை இரண்டு குடிகாரர்கள் என்னிடம் கடனுக்காக கொண்டு வந்து கொடுத்தனர். அவற்றை வாங்கி என் பட்டறைப் பெட்டியில் பூட்டி வைத்தேன். சிறிது நேரத்திற்கு பிறகு பெட்டியைத் திறந்த போது, அதற்குள் இரண்டு நல்ல பாம்புகள் இருந்தன. என்னைப் பார்த்ததும் சீறின. ஆனால், அந்த பெட்டிக்குள் நான் வைத்த பாம்படங்கள் இல்லை. உடனே, பெட்டியை பூட்டி விட்டேன். தொடர்ந்து, என்னிடம் பாம்படங்களை கொடுத்த குடிகாரர்களை பிடித்து, நீங்கள் கொடுத்த பாம்படங்கள் இரண்டும் என் கண்களுக்கு பாம்பாக தெரிகிறதே என்று கேட்டேன். அவர்களும் என்னுடன் வந்து, அந்த பெட்டியை திறந்து பார்த்தார்கள். அப்போதும் இரு நல்லப் பாம்புகள்தான் தெரிந்தன. அப்போதுதான், அந்த பாம்படங்களை ஒரு பெண்ணிடம் வழிப்பறி செய்து பெற்றதாக அவர்கள் என்னிடம் கூறினார்கள். சிறிதுநேரம் கழித்து, தங்களை நினைத்தபடி அதே பெட்டியை மீண்டும் மூன்றாவது முறையாகத் திறந்தேன். அப்போது பாம்புகளை காணவில்லை. நான் ஏற்கனவே வைத்த பாம்படம் இரண்டும் அப்படியே இருந்தன. உடனே, ஓட்டமும் நடையுமாக உங்களை பார்க்க வந்தேன்" என்று வியர்க்க விறுவிறுக்க நடந்த சம்பவங்களை ஒரே மூச்சில் சொல்லி முடித்தார் வந்தவர்.
எதுவும் பேசாமல் இலேசாக புன்முறுவல் பூத்த அய்யா, அவருக்கு திருநாமம் கொடுத்து வழியனுப்பி வைத்தார்.சிறிது நேரத்தில், முந்திரிக் கிணற்றுக்கு நீராடச் சென்ற உமய பார்வதியும், அவளது இரு குழந்தைகளும் வந்தனர்.அவளிடம், அவளது இரு பாம்படங்களையும் கொடுத்தார் அய்யா.
அவளுக்கு அதை பார்த்த மாத்திரத்தில் மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்றுவிட்டாள். ஆனந்தத்தில் திக்குமுக்காடினாள்.மகிழ்ச்சியோடு அந்த பாம்படங்களை வாங்கிக்கொண்டாள்.அய்யாவின் முன்பு வைத்தே அதை தனது காதுகளில் அணிந்து கொண்டாள்.
அய்யா நின்றிருந்த இடத்தில், அவர் பாதம் பட்ட மண் சிறிது எடுத்து, அதை தனது சேலை முந்தியில் முடிந்து கொண்டாள்.அய்யாவின் அருளாசி பெற்று மறுநாள் சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தாள்.
பின்னாளில், இந்த உமய பார்வதியும், அவளது மூத்த மகனும் சொந்த ஊரான வேப்பங்காட்டில் அய்யாவின் பெயரால் ஒரு நிழற்குடையை நிறுவினார்கள். மேலும், அவளது மகன் அரிசி வியாபாரத்தில் ஈடுபட்டான். நாட்கள் செல்லச் செல்ல அவர்களது குடும்பத்தில் இருந்த வறுமை மாறி, அந்தக் குடும்பம் வளர்ச்சி பெற்றது.
அய்யா உண்டு
thanks to:nellaicharal.blogspot.com
Subscribe to:
Comments (Atom)
இதை படித்தீர்களா?
உதவுங்கள்
அன்பான அன்புகொடி மக்களுக்கு ஒரு பனிவான வேண்டுகோள்.நமது தளத்தில் வெளியிட உங்களிடமிருந்து அய்யாவை பற்றிய தகவல்கள் தேவைபடுகின்றன.
ஆகவே நீங்கள் அறிந்த தாங்கல்(அய்யா கோவில்) பற்றிய தகவல்கள்,அல்லது உங்கள் வாழ்வில் அல்லது உங்கள் குடும்பத்தில் வைகுண்டர் செய்த அற்புதங்கள் போன்ற தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.
தொடர்புக்கு:anbukodi.co.cc@gmail.com
அன்புக்கொடி மக்கள்
அய்யா வைகுண்டர்

அருள்வாக்கு
அய்யாவழி மக்கள் அகிலத்திரட்டு அம்மானையை இனையத்தில் படித்து மகிழுங்கள்.
அய்யாவழி வலைதளங்கள்
எங்களை தொடர்பு கொள்ள.....
EMAIL ID:anbukodi.co.cc@gmail.com
Mobile:8754563500








